×

தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தவர்கள் பட்டியலை எஸ்பிஐ இன்று சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தவர்கள் பட்டியலை வழங்க வரும் ஜூன் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரவுகளையும் இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்துக்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கான சட்டம் கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசால் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ பல ஆயிரம் கோடி வரையில் நன்கொடையாக வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் நிதி கொடுத்தார்கள் என்ற விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படாது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட நான்கு பொதுநல மனுக்களை 5 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது.

கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்,\\”, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும். அதை மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் கடந்த 4ம் தேதி ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\\”தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. எஸ்பிஐ மீது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதத்தில், ” உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவை எஸ்.பி.ஐ வங்கி ஏற்கிறது. இருப்பினும் இதுதொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், அவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக சேகரிப்பதில் பிரச்னை இருக்கிறது. அதனால் தான் அவகாசம் கேட்கிறோம் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பாரத ஸ்டேட் வங்கிக்கு சரமாரி கேள்வியெழுப்பினார். அதில், ‘‘தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், அதற்கும் காலஅவகாசம் கேட்பதை முடியாது. நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் வங்கிக்கு என்ன சிரமம். மேலும் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சீலிடப்பட்ட கவரில் தான் வைத்து இருப்பீர்கள். அதனை பிரித்து பார்த்தால் கொடுத்த நபர், எவ்வளவு கொடுத்தார் என்று முழுவிவரங்களும் தெரிந்துவிடும். அதற்கு ஏன் அவகாசம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. ஸ்டேட் வங்கியில் ஒரு சில அதிகாரிகள் மட்டும் தான் இருக்கிறார்களா. பல ஆயிரக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் முன்னதாக நாங்கள் கொடுத்த 26 நாட்கள் கால அவகாசத்தில் என்ன தான் செய்து கொண்டு இருந்தீர்கள். இத்தனை தேர்தல் பத்திரங்களை தான் இதுவரையில் சரி பார்த்துள்ளோம் என்பதை கூட பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கவில்லை என்பது தவறான ஒன்றாக இருக்கிறது. மேலும் 24 க்கும் குறைவான அரசியல் கட்சிகள் தான் தேர்தல் பத்திரங்களின் மூலமாக நன்கொடை பெற்றுள்ளார்கள். அதன் தகவல்களை சேகரிப்பது என்பது மிகவும் சுலபம் ஆகும். குறிப்பாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மற்றும் அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றி உச்ச நீதிமன்றம் எதுவும் தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை என்பதை எஸ்.பி.ஐ தரப்பில் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பத்திரங்கள் யாருக்கு எந்த அரசியல் கட்சிக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எளிதாக சேகரிக்க கூடியது தான் என்று சரமாரி கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து நீதிபதிகள் கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ‘பல்வேறு நிலைகளில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்கள் சீலிடப்பட்ட கவரில் மும்பை தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் வாங்கப்பட்ட பத்திரங்கள் மற்றும் பணமாக்கப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றை சரிபார்க்கும் செயல் சற்று காலம் எடுக்கும். குறிப்பாக மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் பிப்ரவரி 2024ம் ஆண்டு வரை பெறப்பட்டுள்ளது. இது சுமார் 44,434 டேட்டா பதிவுகளாக உள்ளது. இதனை ஒருங்கிணைத்து தாக்கல் செய்ய காலம் பிடிக்கும். எனவே உச்ச நீதிமன்றம் முந்தைய உத்தரவின் சில பகுதிகளை திருத்தம் செய்தால், மூன்று வாரங்களுக்குள் விபரங்களை எங்களால் தாக்கல் செய்ய இயலும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கைக்கு எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,\\” என்ன தேதியில் தேர்தல் பத்திரங்களை, யார் வாங்கினார்கள், அரசியல் கட்சிகள் வங்கியில் டெபாசிட் செய்த தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஒன்றைக்கூட பாரத ஸ்டேட் வங்கி செய்யவில்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் எஸ்.பி.ஐ வங்கி குறிப்பிட்ட தகவல்களை வெளியிட வேண்டும் என சட்டப்படி நீதிமன்றம் கேட்கும்பொழுது அதனை அவர்கள் வெளியிட்டு தான் ஆக வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,” பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் அனைத்தையும் மார்ச் 12ம் தேதி (இன்று) மாலை ஐந்து மணிக்குள் பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்ய வேண்டும். அதனை மார்ச் 15ம் தேதிக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எஸ்பிஐ மதிக்காவிட்டால், வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்கு தொடர வேண்டி வரும் என்று எச்சரித்து இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

The post தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தவர்கள் பட்டியலை எஸ்பிஐ இன்று சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடு appeared first on Dinakaran.

Tags : SBI ,Supreme Court ,New Delhi ,State Bank of India ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...